ஒரு கதை சொல்லட்டுமா சார் - #003

வண்டியைத் தள்ளியபடி சென்று கொண்டிருந்த தங்கராசுவின் முகம் யோசனைகளில் சிக்கிச் சுருங்கியிருந்தது....
நான்கு நாட்களாக வியாபாரம் சற்று மந்தம் தான்...

அதனால் இன்னும் பத்து நாட்களில் கல்லூரிக்குக் கட்டணம் செலுத்தப் பணம் சேர்ப்பதில் சற்றுத் தொய்வு...

தெருவோரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு,  வீட்டிற்குள் நுழைந்து படுத்த பிறகும், யோசனை குறையவில்லை...

சட்டென முகம் பிரகாசமானது, நடுராத்தியில் சட்டென எழுந்தமர்ந்து, எடுத்த முடிவை உறுதி செய்தது போலத் தலையை ஆட்டி ஆட்டி தனக்குத்தானேப் பேசியபடி மீண்டும் படுத்து உறங்கிப் போனான் தங்கராசு....

அடுத்து வந்த எட்டு நாட்களும் வழக்கம் போல அந்தச் சின்னத் தள்ளு வண்டியில் சுண்டல் கடலை  வியாபாரம் தொடர்ந்தது...

ஒன்பதாவது நாள் தங்கராசு நேராக, அந்த வட்டாரத்திலிருந்த வேறொரு வியாபாரியிடம் போய் நின்றான்... ஏதேதோ பேசி முடித்து, வண்டியை ஒப்படைத்து விட்டு, பணம் பெற்றுக் கொண்டு திரும்பி விட்டான்...

பத்தாவது நாள்....
கல்லூரிக்குச் சென்று, தனது முதலாமாண்டுச் சேர்க்கைக்கானக் கட்டணத்தைச் செலுத்தி விட்டு திரும்ப வந்து, வியாபாரியிடம் நின்றான்...

அந்த வியாபாரி,  
உன் வண்டியைவே எடுத்துப் போப்பா...
எனக்கு வாடகை வேண்டாம்....
சீக்கிரம் அசலை மட்டும் திருப்பிக் கொடுத்தாப் போதும் பா என்றதும்,
கண்கலங்கி நின்ற தங்கராசு, அவர் கால்களில் விழுந்து நிமிர்ந்தான்...

உழைப்பு என்றும் உயர்வானது என்று உணர்த்திச் செல்லும் தங்கராசுவை பெருமை பொங்கப் பார்த்தவாறு,
எலேய் தங்கராசு, நீ கெட்டிக்காரன்டா...
அப்பா அம்மாவை இழந்துட்டு அநாதையா வந்து இங்கன சேர்ந்த, உன் உழைப்புலேயே படிச்சுக்கிட்டு, சொந்தமா வண்டி வாங்கி வியாபாரம் செய்ற வரைக்கும் வந்துட்ட,
இப்போ என்னடான்னா,
கல்லூரிப் படிப்புக்காக, சொந்த வண்டியை வித்துட்டு, மறுபடி முதல்ல இருந்து உழைக்க ஆரம்பிச்சிட்டியேடா....நீ நல்லா வருவ டா...என மனதார வாழ்த்தி நின்றார் வியாபாரி...

Comments